'வயசாகிவிட்டதா...? எனக்கா...?' - பெடரரின் பிறந்தநாள் ஸ்பெஷல்

Updated: 08 August 2019 16:10 IST

Roger Federer: நடால் உடன் நீயா நானா என்ற சமபல ஆட்டத்தை விளையாடவும் ஜோகோவிச்சின் டை பிரேக்கர்களை வெல்ல வேண்டும் என எண்ணி ‘ஹாப்பி பர்த்தே’ மிஸ்டர்.ரோஜர் பெடரர்.

Roger Federer turns 38 - does age matter to him; Happy Birthday Roger Federer

Happy Birthday Roger Federer: டென்னிஸ் பார்க்க துவங்கிய காலம் அது. 2008 ஆம் ஆண்டு. விம்பிள்டண் இறுதி போட்டி. பெடரர் – நடால் பலப்பரீட்சை. முதல் இரண்டு செட்களை நடால் எளிதாக வென்றுவிட்டார். அவ்வளவு தான் பெடரரின் ஆட்டம் முடிந்தது என நினைத்தால் அடுத்த செட்டை டை-பிரேக்கர் வரை கொண்டு சென்றார் பெடரர். மூன்றாவது செட்டை 7-5 என தன் வசமாகினார் பெடரர். நான்காவது செட்டும் அதே நிலைமை தான். இந்த முறை டை-பிரேக்கரும் நீடித்து கொண்டே சென்றது. 10-8 என டை பிரேக்கரை வென்றார் பெடரர். சாம்பியனை நிர்ணைக்கும் ஐந்தாவது செட்டில் 9-7 என பெடரரை வென்று 2008 ஆம் ஆண்டின் விம்பிள்டண் சாம்பியனார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடம் நீடித்த இந்த போட்டி டென்னிஸ் உலகின் சிறந்த போட்டியாக கருதப்படுகிறது.

11 ஆண்டுகள் 'பாஸ்ட் பார்வர்ட்' பண்ணினால் அதே விம்பிள்டண். அதே பெடரர் இம்முறை எதிரில் நோவக் ஜோகோவிச். முதல் செட் நோவக், இரண்டாம் செட் பெடரர், மூன்றாம் செட் நோவக், நான்காம் செட் பெடரர் என 2-2 சமநிலையில் வந்த போது ஆட்டம் கடைசி செட் சென்றது. மாறி மாறி கடைசி செட்டை தனக்குரியது ஆக்கிய நிலையில் இறுதியில் 13-12 என வெற்றி பெற்றார் நோவக்.

பட்டத்தை வேண்டும் என்றால் நடால், நோவக் வென்றிருக்கலாம் ஆனால் அன்றும் இன்றும் அனைத்து டென்னிஸ் ரசிகர்களின் இதயத்தையும் வென்றவர் பெடரர் தான். 38 வயதில் 4 மணி நேரம் 57 நிமிடங்கள் டென்னிஸ் களத்தில் நிலைத்து நின்று சம பலத்தை நிரூபிக்க முடியும் என அன்று நிரூபித்தார் ரோஜர் பெடரர்.

பீட் சாம்ரஸ், ஆண்டி அகஸ்சி, ஆண்டி ராடிக், ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் – என எதிரே விளையாடுபவர் காலத்திற்கு ஏற்ப மாறினாலும் ஒரே ஒரு பெயர் மட்டுமே என்றும் நிலைத்து கொண்டிருந்தது / கொண்டிருக்கிறது – ரோஜர் பெடரர் (Roger Federer).

கிரிக்கெட், கால்பந்து, கூடைபந்து போன்றதல்ல டென்னிஸ். ஏனைய போட்டிகள் குழு போட்டி என்பதால் உடன் விளையாடுபவர்களின் திறமையும் மிக முக்கியமானது. ஆனால் டென்னிஸில் தனது ஆட்டத்திறனை பொருத்தே அந்த வீரர் மதிக்கப்படுவார்.

பெடரரின் வளர்ச்சி என்பது 1999 யில் துவங்கியது. அந்நாளில் பிரென்சு ஓபன் சாம்பியனான கார்லஸ் மோயாவை வீழ்த்தியதே பெடரரின் ஆரம்பம். ரோஜரின் டென்னிஸ் ராஜாங்கம் துவங்கியது என எதை கூறலாம் என்றால் 2001 விம்பிள்டணை கூறலாம். பீட் சாம்பிரஸை ஐந்து செட்களில் வென்று காலிறுதிக்கு சென்றார். 14 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற பீட் சாம்பிரஸை வீழ்த்திய போது பெடரரின் வயது 19 தான்.

கிராண்ட்ஸ்லாம்களை 2003 யில் வெல்ல துவங்கினார் பெடரர். டென்னிஸ் உலகின் புது சென்சேசனாக கருதப்பட்ட பெடரர் மற்றும் ஆண்டி ராடிக் அந்த ஆண்டின் விம்பிள்டண் அரையிறுதி போட்டியில் விளையாடினர். ஆண்டி ராடிக், அதிவேக சர்வ் செய்வதில் வல்லவர். அவரை வென்றார் பெடரர்.

பெடரருக்கு அதன் பின் ஏறுமுகம் மட்டுமே இருந்தது. அவர் டென்னிஸ் உலகின் ராஜாதிராஜாவாக வலம் வந்த மாதிரி இனி யாராலும் அப்படி வலம் வர முடியாது.

தனி காட்டு ராஜாவாக இருந்த பெடரருக்கு சம பலத்துடன் கடுமையான சவால் அளிக்க வந்தார் ரபேல் நடால். இளம் இரத்தம், துடிப்பான ஆட்டம், ஸ்ட்ராங்கான உடம்பு என செதுக்கி வைத்தவர் போல் இருந்தார் இளம் நடால்.

பெடரரிடம் ஆண்டி ராடிக் மாதிரி அதிவேக சர்வ் கிடையாது. நடால் போல் செதுக்கிய உடம்பு கிடையாது. நோவக் மாதிரி ஸ்ட்ராங் பேக்ஹாண்ட் கிடையாது. ஆனால் இவை அனைத்திலும் சம அளவு பெற்றிருப்பார் பெடரர். டென்னிஸ் களத்தில் என்றும் தனது கூல் இழக்காமல் பார்த்து கொள்வார் பெடரர்.

புல் தரையிலும் ஹார்ட் கோர்ட்டிலும் சிறப்பாக விளையாடும் பெடரர், களிமண் தரையில் மட்டுமே சற்று சிரமப்படுவார். வேகமாக வரும் பந்து, பெடரரின் ஒன் ஆண்ட் பேக்ஹாண்ட் (One hand backhand) ஆகியவை களிமண் தரையில் பெடரரின் சரிவிற்கு காரணம்.

14 கிராண்ட்ஸ்லாம் என்பது ஒரு எளிதான காரணமல்ல. சாம்ப்ரஸ் 14 கிராண்ட்ஸ்லாம் வென்ற போது இந்த சாதனையை இனி யாராலும் தகர்க்க முடியாது என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் அதனை கெத்தாக உடைத்தார் பெடரர்.

தனது 14வது கிராண்ட்ஸ்லமாக களிமண் கிராண்ட்ஸ்லாமான பிரென்சு ஓபனை வென்றார் பெடரர். தன் மீது வைக்கப்பட்ட விமர்ச்சனமான கரியர் கிராண்ட்ஸ்லாமிற்கு பிரென்சு ஓபனை வென்று பதிலளித்தார் பெடரர்.

14 யை கடந்த பின்பு விம்பிள்டண், ஆஸ்திரேலியா, யூ.எஸ் ஓபன் என வென்று தனது ஆட்டத்தை தொடர்ந்தார் பெடரர். ஆனால் வயது என்னவோ பெடரர் வசமில்லை. மேலும் நடால் தனது பீக் பார்ம் அடைந்த கட்டமும் இது தான். செர்பியாவின் நோவக் தனது ஆட்டத்தால் டென்னிஸ் உலகை திரும்பி பார்க்க வைத்த காலமும் இது.

2013 யில் காயத்தால் அவதிப்பட்டார் பெடரர். ஆனால் அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து விட்டார். தன் விளையாட்டு கரியரில் 2016 ஆண்டை தான் மோசமான ஆண்டாக பதிவு செய்தார் பெடரர். மூட்டியில் காயம் காரணமாக அந்த ஆண்டு எந்த பட்டத்தையும் வெல்லவில்லை பெடரர். 2000 க்கு பின்பு பெடரர் ஒரு பட்டம் கூட வெல்ல முடியாமல் போன ஆண்டு 2016 தான்.

பெடரரின் ஆதிக்கம் முடிந்து விட்டது, பெடரர் அவ்வளவு தான் என பலர் கூறத்துவங்கினர். ஆனால் காயம் பட்ட சினம் கொண்ட சிங்கம் போல் சீறி எழுந்தார் பெடரர். காயத்தில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா ஓபனை வென்று ‘ஐ எம் ஆல் டைம் கிரேட்' என பதிவு செய்தார் பெடரர். கூடுதலாக 'பேக் டு நம்பர் ஒன்' அந்தஸ்து வேற.

பெடரர் – நடால் என்பது டென்னிஸ் உலகின் சிறந்த ரைவல்ரி (Rivalry). இதுவரை 40 முறை பெடரரை எதிர்கொண்டுள்ளார் நடால். அதில் நடால் 24 முறையும் பெடரர் 16 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் குறிப்பிட வேண்டியது நடால் வென்ற 24 போட்டிகளில் 14 போட்டி வெற்றிகள் களிமண் தரையில் பெற்றவை. புல் தரை, ஹார்ட் கோர்ட்களில் பெடரரின் ஆதிக்கமே தொடர்கிறது.

நடாலை விட நோவக் ஜோகோவிச்சை தான் அதிக முறை எதிர்கொண்டுள்ளார் பெடரர். 48 முறை ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடி 22 முறை வெற்றி பெற்றுள்ளார் பெடரர்.

31 கிராண்ட்ஸ்லாம் பைனலில் பங்கேற்ற ஒரே வீரர் பெடரர் தான். டென்னிஸில் இது போல் இனி நடக்குமா என்பது கேள்விகுறியே. அந்த 31 பைனல்களில் 20 யில் வெற்றி பெற்று 20 கிராண்ட்ஸ்லாம்களை தனக்குரியதாக்கியுள்ளார் பெடரர். இது சாதாரண விஷயமல்ல. ஏனெனில் தனது பின் கால டென்னிஸ் வாழ்க்கையில் பெடரர் எதிர்த்து விளையாடியது நடால், ஜோகோவிச் என்னும் இரு பெரும் ஜாம்பவன்களை.

102 ஏடிபி பட்டங்கள், ஒலிம்பிக் தங்கம், டேவிஸ் கோப்பை, ஹாப்மென் கோப்பை என பெடரர் தொட்டது எல்லாம் தங்கமாகியது. உலக தரவரிசையில் 237 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார் பெடரர். இது மனிதர்களால் சாத்தியமாகும் என்றால் இல்லை என்பதே பதில்.

மொத்தம் 310 வாரங்கள் உலகின் முதல் வீரரராக வலம் வந்த பெடரர் (Federer), தன்னிடம் இன்னும் டென்னிஸ் மிச்சம் இருக்கிறது என இந்த விம்பிள்டண் பைனலில் நிருபித்தார். இன்னும் ஐந்து கிராண்ட்ஸ்லாம்கள் வென்று 25 கிராண்ட்ஸ்லாம்களை வென்றவர் என தகர்த்த முடியாத சாதனையையும் பெடரரால் படைக்க முடியும்.

பண அக்கவுண்டுக்கும் மலை தொடர்களுக்கு மட்டுமே பிரபலமான சுவிட்சர்லாந்தில் 1981 யில் பிறந்து டென்னிஸ் உலகிற்கே ஒரு புது பரிமாணத்தை வழங்கிய பெடரர் இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வயது அவருக்கு ஒரு பொருட்டாக கூட தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. '37 வயதில் நான் பெடரர் விளையாடுவது போல் விளையாடவே ஒரு வரம் கேட்பேன்' இது விம்பிள்டண் வென்ற பின் உலகின் தற்போதைய நம்பர் 1 வீரர் நோவக் கூறியது.

2019 விம்பிள்டண் இறுதி போட்டி 'வயசாகிவிட்டதா...? எனக்கா...?' என நம்பை நோக்கி பெடரர் கேட்பது போல் அமைந்தது. அந்த ஆட்டம் போலவே இனி வரும் அனைத்து பெடரர் ஆட்டமும் அமைய வேண்டும் என நினைக்கிறோம். ஒரு சிறு மாறுதல் தான். சாம்பியன் பெயரில் பெடரரின் பெயர் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட பெடரர், இன்னும் இன்னும் பல கிராண்ட்ஸ்லாம்கள் வெல்லவும், நடால் உடன் நீயா நானா என்ற சமபல ஆட்டத்தை விளையாடவும் ஜோகோவிச்சின் டை பிரேக்கர்களை வெல்ல வேண்டும் என எண்ணி ‘ஹாப்பி பர்த்தே' மிஸ்டர்.ரோஜர் பெடரர்.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பெடரர்
  • 20 கிராண்ட்ஸ்லாம்கள் வென்றுள்ளார் பெடரர்
  • அவரது ஆட்டம் இன்னும் தொடரும் என கருதப்படுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
ஆஸ்திரேலிய ஓபனில் கண்ணாமூச்சி விளையாடிய ரோஜர் பெடரர்!
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
"கொலம்பியாவில் போட்டி ரத்தானது என்னை பலவீணம் ஆக்கியது" - ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரரை பின்பற்றும் சிறுவன்... வீடியோ பகிர்ந்த ஏடிபி!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
ரோஜர் பெடரர் உருவத்தில் நாணயம் வழங்க சுவிட்சர்லாந்து அரசு முடிவு!
Advertisement