
விவசாயியின் மகனும், 9ம் வகுப்பு மாணவனுமான அங்குசாமி மற்றும் அவனோடு 3 சிறுவர்களும் முதல் முறையாக விமானத்தில் பறந்துள்ளனர். இதற்கு காரணமாக இருந்தவர் அவர்களுடைய விளையாட்டு ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார். கடந்த வருடம் ராஜ்குமார் மாணவர்களிடம் மாநில அளவிலான போட்டிகளில் வென்றால் விமானத்தில் அழைத்து செல்வதாக கூறியிருந்தார்.
அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களான இவர்கள் மாநில அளவிலான 4*100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
"கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு அருகில் தான் பயிற்சி மேற்கொண்டார்கள். அவர்களுக்கு நாம் அளிக்கும் உத்வேகம் மிகவும் அதிகம் உதவும்" என்றார்.
விமானத்தில் பறந்தது பற்றி பேசிய அங்குசாமி ''இது ஒருவித்தியாசமான அனுபவமாக இருந்தது. விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் கனவு" என்றார்.
11ம் வகுப்பு படிக்கும் முத்துகணபதியும் போலீஸ் ஆகவேண்டும் என்றார். 12ம் வகுப்பு படிக்கும் முத்து குமரவேல் விவசாயத்தை பாடமாக படிக்க போவதாக தெரிவித்தார். தீபக் ராஜ் வங்கி அதிகாரியாக வேண்டும் என்றார்.
கடந்த வருடமும் இதேபோல பேரின்பசோழன் எனும் குத்துச்சண்டை வீரராக உருவாகும் மாணவன் மாநில அளவிலான போட்டிகளில் வென்றதால் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார் காட்வின்.
தான் விமானத்தில் பயணிக்க 40 வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும், அதற்காக தான் இந்த மாணவர்களை அழைத்து சென்று ஊக்குவிப்பதாகவும் காட்வின் கூறினார்.
50 மாணவர்களை தேக்வாண்டா செய்ய வைத்து கின்னஸ் சாதனை படைக்க காத்திருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.