
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி நீக்கப்பட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாக இருந்தது. இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"பிசிசிஐயின் அணி தேர்வாளர்கள் ஏற்கெனவே இது குறித்து முடிவெடுத்திருப்பார்கள். இதற்கான காரணத்தை ஏன் நான் இப்போது கூற வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. இது தேர்வுகுழுவினர் சொல்ல வேண்டிய விஷயம். இன்னும் சொல்லப்போனால் அந்த பேச்சுவார்த்தையின் போது நான் அங்கு இல்லை. தேர்வுக்குழுவினர் சொன்னதை தான் என்னாலும் சொல்ல முடியும்.
தேர்வுக்குழுவினர் நிறைய விஷயங்களை வைத்து ஒரு விஷயத்தை முடிவு செய்கின்றனர். அதன்படி பார்த்தால் தோனியை அணியை விட்டு நீக்கவில்லை. அவர் இன்னும் அணியின் முக்கியமான வீரராகவே இருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் போன்றவர்களுக்கு டி20 போட்டிகளில் அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். தோனியால் தான் இப்போது உள்ள அணியில் இளைஞர்களுக்கு அதிகம் உதவ முடியும். அதனால் அவர் அணியில் இருப்பது மிகவும் முக்கியமான விஷயம்.
எப்படியும் அவர்தான் ஒருநாள் போட்டியில் தொடரப் போகிறார். இதில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைவிட இந்திய அணிக்கும், இளம் வீரர்களுக்கும் தோனியின் தேவை அதிகம் என்பதே என் கருத்து" என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் கோலி.
இது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது '' இதில் யாரையும் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. தேர்வுக்குழுவின் மனநிலை பற்றி தெரியவில்லை. இது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவினர் சம்பந்தப்பட்ட விஷயம்" என்று கூறியுள்ளார்.