
கால்பந்து உலகின் முக்கிய விருதுகளில் ஒன்று FIFA விருதுகள். 2019 ஆண்டிற்கான பிபா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. வழங்கம் போல் யார் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதிற்கு மெஸ்சி, ரொனால்டோ இடையே தான் போட்டி இருந்தது. இவர்களுடன் போட்டியில் இணைந்த மற்றொரு வீரர் லீவர்பூல் அணியின் விர்ஜில் வான் ஜிக். விர்ஜில், சென்ற மாதம் UEFA சிறந்த வீரர் விருதினை வென்றிருந்தார்.
மிலனின் லா ஸ்கேலா ஒப்பேராவில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் ரொனால்டோ பங்கேற்கவில்லை. டிசம்பர் 2 யில் வழங்கப்படும் Ballon d'Or விருதினை வெல்ல மெஸ்சி, விர்ஜில் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எண்ணப்படுகிரது.
2016 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த பிபா விருதினை மெஸ்சி வெல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2016, 2017 யில் ரொனோல்டோவும் 2018 யில் லூகா மோட்ரிக்கும் வென்றிருந்தனர்.
‘இந்த அங்கீகாரத்தை எனக்கு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்றார் மெஸ்சி. ஐரோப்பா தங்க ஷீவையும் மெஸ்சியே வென்றார். 2019 யில் 36 கோல்கள், லா லிகா கோப்பை, 2019 கோபா அமெரிக்காவில் வெண்கல பதக்கம் ஆகியவற்றை மெஸ்சி வென்றிருந்தார்.
லிவர்பூல் அணியின் பயிற்சியாளரான ஜுர்கன் க்லோப் பிபா பயிற்சியாளர் விருதினையும் லிவர்பூல் அணியின் கோல்கீப்பர் ஆலிசன் பெக்கர் பிபா கோல்கீப்பர் விருதினையும் வென்றார்.
பெண்கள் பிரிவில் பிபா சிறந்த வீராங்கனை விருதினை மேகன் ராபின்னோவும் யூஎஸ்ஏ பெண்கள் அணியின் பயிற்சியாளரான ஜில் எல்லிஸ் சிறந்த பயிர்சியாளருக்கான விருதினையும் வென்றார்.
‘மகிழ்ச்சியில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. இது போல் அரிதாக தான் நடந்துள்ளது' என்றார் மேகன்.
Fairplay விருது லீட்ஸ் யூனைடத் அணிக்கு வழங்கப்பட்டது. சிறந்த கோலாக ஹங்கேரியின் டானியல் சோரியின் கோல் தேர்ந்தெடுக்கப்பட்டது. மெஸ்சி மற்றும் ஜூவனை வீழ்த்தி பிபா புஸ்கர் விருதினை வென்றார் டானியல்.