
ஃபிஃபா உலக கோப்பையில் இருந்து இங்கிலாந்து வெளியேறினாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் சவுத்கேட்
கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு, இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால், 2018 ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில், குரோஷியா அணியிடம் இங்கிலாந்து தோல்வியுற்றது.
இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் தொடங்கும் முன், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என அனைவரும் எதிர்ப்பார்க்கவில்லை. இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் சவுத்கேட் முக்கிய காரணம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இங்கிலாந்து நாட்டில் தற்போது அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டு பிரச்சனைகளால், பிரதமர் தெரேசா மேவின் ஆட்சி குழப்பத்தில் உள்ளது. இதனால், மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக கால்பந்து பார்க்கப்படுகிறது
“நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கால்பந்து விளையாட்டு எங்களை ஒன்றிணைக்கும்” என்று பயிற்சியாளர் சவுத்கேட் தெரிவித்திருந்தார்.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பெனால்டி கோல்கள் அடித்து வெற்றி பெற்றது இந்த ஆண்டு உலக கோப்பை தொடரின் முக்கிய தருணங்களில் ஒன்று. கொலம்பியாவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நழுவவிட்ட மடீயஸ் உரிப், கைகளைக் கொண்டு முகத்தை மூடியபடி மைதானத்தில் அழுது கொண்டிருந்தார். அவரை, கட்டித்தழுவி மனம் தேற்றினார் இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட்.
கடந்த 1996 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில், ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சவுத்கேட் நழுவவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது “எங்கள் நாட்டின் கனவை சிதைத்துவிட்டேன். இனி வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவம் என் நினைவில் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
சவுத்கேட்டின் செயல்களை பத்திரிக்கையாளர் பாராட்டி வருகின்றனர். “கடந்த 20 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு இருந்த அச்சம், சந்தேகம் தற்போது மறைந்துவிட்டது. அணியின் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது. இங்கிலாந்து கால்பந்து அணியின் மீதான எண்ணத்தை மாற்ற சவுத்கேட் வெற்றி பெற்றுள்ளார்” என்று பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் ஓலிவர் ஹோல்ட் கருத்து தெரிவித்துள்ளார்
“பத்திரிக்கையின் முதல் பக்கத்தில், நாட்டின் பிரிவினை... பின்னடைவு.... கடைசி பக்கத்தில்... நாட்டின் ஒற்றுமை.. கால்பந்து பாலம்.. இதற்கு எளிமையான தீர்வு: உலக கோப்பை போட்டிகளுக்கு பின்னர், சவுத்கேட்டை இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்பது தான்” என்று டெய்லி மிரர் பத்திரிக்கையின் கால்பந்து எழுத்தாளர் ஜாக் கிராஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்
அதுமட்டுமல்லாமல், சவுத்கேட் அணியும் வெயிஸ்ட்கோட் ஸ்டைலுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று #WaistcoatWednesday என்ற ஹாஷ்டாக் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மட்டும் இல்லாமல், தனி மனிதராகவும் சவுத்கேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
வெற்றி பெறுவது அவரின் நோக்கமில்லை. அதையும் தாண்டி, அணி வீரர்களை பாதுகாத்து கொள்பவர். பாசிடிவ் வைப்ரேஷனுடன் செயல்பட கூடிய பயிற்சியாளர். சிறப்பான குணநலன்களுடன் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர். அதனால் தான் இங்கிலாந்து ரசிகர்கள் விரும்பும் மக்கள் நட்சத்திரமாக மனதில் இடம் பிடித்துள்ளார் காரெத் சவுத்கேட்.
(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)