
தமிழக அளவில் 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதிவு செய்த வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தரப்பில் வெளி மாநில வீரர்களையும் டி.என்.பி.எல்லில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. வீரர்கள் தங்கள் மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் தடையில்லா சான்றிதழ பெற்றவுடன் அனுமதிக்க வழி வகை செய்வதாகவும், டி.என்.பி.எல் தரப்பில் கூறப்பட்டது.
பங்கேற்கும் எட்டு அணிகளில், ஒவ்வொரு அணியிலும் 2 வெளி மாநில வீரர்களை பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று டி.என்.பி.எல் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது, ஆனால் பி.சி.சி.ஐயின் ஆட்சிக் குழு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐயின் சட்ட விதிகளுக்குள், இது வரவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது.
2009-ம் ஆண்டில் இருந்து எந்த வெளி மாநில வீரர்களும் இந்த தொடரில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஆட்சிக் குழு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
புதன்கிழமை தொடங்க உள்ள தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில், 2 வெளி மாநில வீரர்களை சேர்க்க அனுமதித்திருந்தது. ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் இப்போது தடைவிதித்துள்ளது.