
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வெற்றியோ தோல்வியோ எந்த மனநிலையில் இருந்தாலும், கூலாக அணியை வழி நடத்தி செல்வார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், சென்ற வருடம் இலங்கைக்கு எதிராக இந்தூரில் நடைப்பெற்ற சர்வதேச இருபது ஓவர் போட்டியில், ‘கேப்டன் கூல்’ கோபமடைந்தார் என இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் தொடரில், வீராத் கோலி பங்கேற்காததால், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியா அணி விளையாடியது.
இரண்டாவது இருபது ஓவர் போட்டியின் போது குல்தீப் யாதவின் பந்துகளில், இலங்கை அணி வீரர்கள் ரன்கள் குவித்து கொண்டிருந்தனர். “ஒவ்வொரு முறையும் என்னுடைய பந்து சிக்சர் செல்லும் போது, நான் தோனியைப் பார்ப்பேன். நான்காவது ஓவர் வீசும் போது, இலங்கை அணி வீரர் பவுண்டரி விலாசினார். அப்போது தோனி என்னை அழைத்து ‘கவரை நீக்கிவிட்டு விக்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்’ என்று தோனி அறிவுறுத்தினார்”
ஆனால், தோனியின் அறிவுறையை நான் கேட்க மறுத்த போது கோபமான தோனி, 'நான் என்ன பைத்தியமா? 300 ஒரு நாள் போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன்’ என்று தோனி சொன்னதாக தெரிவித்தார் குல்தீப்.
அதன் பிறகு ஃபீல்டிங் முறைகளை மாற்றி அமைத்த பின், ஒரு விக்கெட் வீழ்த்தினார் குல்தீப் யாதவ். அன்று நடைப்பெற்ற போட்டியில், 4 ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் பெற்றார்.
மேலும், இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.