
அது மார்ச் 24, 2015. தென் ஆப்ரிக்கா அணியை உலகக்கோப்பையின் அரையிறுதியில் எதிர் கொண்டது நியூசிலாந்து. கடைசி ஓவர் வரை வெற்றி தென் ஆப்ரிக்கா வசம் இருந்தது. ஆனால் எலியட் அடித்த ஒரு சிக்ஸர் தென் ஆப்ரிக்காவிற்கு இடியாக அமைந்தது. மைதானத்தில் ஒரு கிரிக்கெட் ஜாம்பவன் கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்தார். அவர் கண்ணீர் வடிப்பதை கண்டு கோடான கோடி ரசிகர்ளும் கண்ணீர் வடித்தனர். அவர் தான் ஏபி டி வில்லியர்ஸ். ஒரு வீரருக்காக ஒரு அணியே வெற்றி பெற வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணினார்கள் என்றால் அது ஏபி டி வில்லியர்ஸ் காக தான்.
ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் தான் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி உலகம் முழுவதும் ஒரு ரசிகர் ஆர்மியையே சம்மாதித்து வைத்திருந்தவர் / வைத்திருப்பவர் ஏபி டி வில்லியர்ஸ்.
தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாடிய ஏபிடி, 2018 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார் ஏபிடி.
2019 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அணி மோசமாக செயல்பட்டது. தொடர்ந்து மூன்று போட்டிகள் தோல்வி கண்ட நிலையில் ஒரு வதந்தி பரவ துவங்கியது. தென் ஆப்ரிக்காவின் உலகக்கோப்பை அணி அறிவித்த பின்பு ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வில் இருந்து திரும்பி தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை போன்று ஒரு சுயநல கிரிக்கெட் வீரரை பார்க்கவே முடியாது என குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதற்கு ஏபி டி வில்லியர்ஸின் அப்போது அளித்த பதில் மவுனமே.
தன் அணியின் கவனம் முழுவதும் உலகக்கோப்பை பக்கம் இருக்க வேண்டும் என எண்ணினார் ஏபிடி. அதனால் உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்காவின் ஆட்டம் முடிந்த நிலையில் தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு இன்று விவரமாக பதிலளித்துள்ளார் ஏபிடி.
‘குடும்பத்துடன் நேரம் செலவிடவே நான் 2018 யில் ஓய்வை அறிவித்தேன். இருப்பினும் எனக்கு பணம் மட்டுமே முக்கியம் என பல செய்திகள் பரப்பபட்டது. அவை அனைத்தும் பொய்யே. அதிக பணம் தருவதாக கூறி வந்த பல அழைப்புகளை நான் தவிர்த்து இருக்கிறேன். என் ஓய்விற்கு பின் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் உடன் நான் தொடர்பில் இல்லை. கிப்சனின் சிறந்த பயிற்சியிலும் ஃபாப் டு பிளசிஸின் தலைசிறந்த தலைமை பொறுப்பின் கீழும் தென் ஆப்ரிக்கா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. டு பிளஸ்யும் நானும் பள்ளி காலங்களில் இருந்தே நல்ல நண்பர்கள். ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்ததால் ஃபாப் உடன் நண்பர்களாக பேசி கொண்ட போது தென் ஆப்ரிக்கா அணிக்கு நான் கட்டாயமாக தேவை பட்டால் நான் விளையாடுகிறேன். ஆனால் கட்டாயமாக தேவை பட்டால் மட்டுமே என்றேன்' என விளக்கியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.
மேலும் அவர், ‘இந்தியாவுடன் தென் ஆப்ரிக்கா தோல்வியடைந்த பின் ஃபாப் மற்றும் நான் பேசி கொண்டதை யாரோ ஒருவர் பரப்பியுள்ளார். நானோ ஃபாப்போ இதனை பரப்பவில்லை. இதனால் நான் ஒரு சுயநலவாதி என்ற பட்டம் சூட்டப்பட்டேன். தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாடியதற்கும் அந்த அணியை வழிநடத்தியதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இது ஒரு தேவை இல்லாத சர்ச்சையாகும்' என தன் பக்க நியாத்தை கூறினார்.
தனது அட்டகாசமான 360 டிகிரி ஆட்டம் மூலம் உலகையே ஆச்சரியப்பட வைத்த ஏபிடி போன்ற ஒருவர் மீது இப்படி தேவையில்லாத குற்றசாட்டுகள் சுமத்தப்படுவது தேவையில்லாத ஒன்றாகும்.