
இங்கிலாந்து கால்பந்து அணியை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தி ஃபிபா கால்பந்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது க்ரோஷியா.
28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைக்கலாம் என்று நினைத்தது. ஆனால், முதல் முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றேயாக வேண்டும் என்ற வேட்கையில் களம் கண்டது க்ரோஷியா.
மாஸ்கோவில் நேற்று இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஆரம்பித்தது முதலே இரு அணிகளும் கோல் போட முயன்றன. ஆனால், முதல் பாதியில் ஃப்ரீ கிக் மூலம் கோல் போட்டது இங்கிலாந்து அணியின் கெய்ரன் டிரிப்பர் தான். 45 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து ஒரு கோலுடனும் க்ரோஷியா கோல் ஏதும் போடாமலும் இருந்தன.
தொடர்ந்து இரு அணிகளும் கோல் போட முயற்சிகள் எடுத்தன. ஆனால், இரண்டாவது பாதியில் க்ரோஷியா இங்கிலாந்து போட்ட கோலுக்கு பதிலடி கொடுத்தது. ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் இருந்த போது கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
இதில் க்ரோஷியா இன்னொரு கோலை, 111 நிமிடத்தில் அடிக்க, இங்கிலாந்து அரையிறுதியுடன் இந்த முறை உலக கோப்பைக்கு பை-பை சொன்னது.
40 லட்சத்துக்கு கொஞ்சம் அதிகமாக மட்டுமே மக்கள் தொகை கொண்டிருக்கும் க்ரோஷியா, முதன் முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பது கவனத்துக்குரியது.
வரும் 15 ஆம் தேதி மாஸ்கோவில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் க்ரோஷியா, பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளும்.